ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஏற்படுத்திய பரபரப்பு
ஈரானுடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் மோதலால், எப்போது போர் வெடிக்குமோ என்ற அச்சத்துடனேயே பல நாட்டு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
விடயம் என்னெவென்றால், ஏற்கனவே நடந்த போர்களின் தாக்கமே இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை!
ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு
ஆம், இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டுகளே இன்னமும் சில நாடுகளில் வெடிக்காத நிலையில் மறைந்துகிடப்பதால் அவை எப்போது பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற நிலை உள்ளதை மறுப்பதற்கில்லை.

அவ்வகையில், ஜேர்மனியின் சாக்ஸனி மாகாணத்திலுள்ள ட்ரெஸ்டன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று பரபரப்பை உருவாக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு Elbe நதிக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அதை மீண்டும் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், செவ்வாயன்று அதற்காக பள்ளம் தோண்டும்போது, 550 பவுண்டுகள் எடையுள்ள அந்த பிரித்தானிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிக்காக நிலையில் பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வாழும் 18,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
400க்கும் மேற்பட்ட பொலிசாரும், அவசர உதவிக்குழுவினரும் அங்கு குவிக்கப்பட்ட நிலையில், ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் உதவியுடன் அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுவந்தார்கள்.
இந்நிலையில், நேற்று, புதன்கிழமை மதியம் அந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், அது அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |