உலகின் மிக பயங்கரமானவர்... உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடியர்: யார் அவர்?
உலகின் மிக பயங்கரமான sniper என பெயரெடுத்த கனேடிய வீரர் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், ரஷ்ய துருப்புகளை ஒவ்வொன்றாக கொல்லவும் சபதமெடுத்துள்ளார்.
வாலி என்ற புனைப்பெயர் கொண்ட அந்த வீரர், 2015ல் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டுள்ளார். தற்போது தமது பச்சிளம் குழந்தையையும் மனைவியையும் கனடாவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு தமது நண்பர்கள் மூவருடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார்.
2009 மற்றும் 2011ல் கனேடிய இராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானிலும் இவர் களமிறங்கியுள்ளார். கனேடிய துருப்புகளுடன் இணைந்து பணியாற்றும் போதே, 3.5கி.மீ தொலைவில் மறைந்திருந்த ஐ.எஸ் தீவிரவாதியை தமது துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உலக சாதனை படைத்துள்ளார் வாலி.
சனிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டு துருப்புகளுடன் இணைந்து பணியாற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே, வாலி தமது நண்பரின் அழைப்பை ஏற்றே உக்ரைனுக்கு புறப்பட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை தம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டுள்ள அவர், அதனாலையே, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் களமிறங்க தாம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாலியுடன் மேலும் மூன்று முன்னாள் கனேடிய வீரர்களும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை உக்ரைன் துருப்புகள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.