உலகின் முதல் இரு கைகள் மற்றும் முகம் மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நபர் இவர்தான்
உலகிலேயே முதல்முறையாக 22 வயது இளைஞருக்கு முகம் மற்றும் இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த Joe DiMeo எனும் இளைஞர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, அவரது கார் கவிழ்ந்து வெடித்து பெரும் விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் Joe DiMeo உடலில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால், அவரது உடல் பெரும் சேதமடைந்தது.
உதடுகள் மற்றும் இமைகளை இழந்த நிலையில், அவரது முகம் முழுவதுமாக சிதைந்தது. மேலும், இரண்டு கைகளிலும் உள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டியிருந்தது.
அவர் நான்கு மாதங்களில் பல உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இரண்டராய் மாதங்கள் மருத்துவத்தால் தூண்டப்பட்ட கோமா நிலையில் இருந்தார்.இதனால் Joe DiMeo நம்பிக்கையை இழந்து தனது சுதந்திரமான சாதாரண வாழ்க்கையை தொடரமுடியாமல் துன்பப்பட்டார்.
இந்த நிலையில், NYU Langone Health மருத்துவமனை அவருக்கு ஒரு மாற்று வாழ்க்கையை கொடுக்க முன்வந்தது.
NYU லாங்கோனில் முகம் மாற்றுத் திட்டத்தின் இயக்குநர் அறுவை சிகிச்சை நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் தலைமையில் 96 சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு Joe DiMeo-க்கு முகம் மற்றும் இரண்டு கைகளை பொருத்தும் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் 12-ஆம் திகதி 23 மணி நேரம் போராடி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இரு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இது நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் மேற்கொண்ட 4வது முகம் மாற்று அறுவை சிகிச்சை ஆகும், மேலும் அவரது வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் கை மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.
இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு, இப்போது 22 வயது Joe DiMeo தனக்கென இரன்டு கைகளையும் வடுக்கள் இல்லாத ஒரு முகத்தையும் பெற்றுள்ளார்.
இது அவரது வாழ்க்கை மீண்டும் இயல்பாக தொடங்க நம்பிக்கை அளித்துள்ளது.
Joe DiMeo இப்போது உலகின் முதல் முகம் மற்றும் இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை பெற்ற நபராக அறியப்படுவதுடன் அதிர்ஷ்டசாலியாகவும் கருதப்படுகிறார்.
ஏனென்றால், இவருக்கு செய்யப்பட அதே முகம் மற்றும் கைகள் மாற்று அறுவை சிகிச்சை வேறு இரண்டு நபர்களுக்கும் அதே சமயத்தில் நிபுணர் எட்வர்டோ ரோட்ரிக்ஸ் தலைமையில் செய்யப்பட்டது. ஆனால், அவை இரண்டும் தோல்வியில் முடிந்தது.
நோயாளிகளில் ஒருவர் தொற்று தொடர்பான சிக்கல்களால் இறந்தார், மற்றோருவர் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் அடைய தவறியதால் மீண்டும் கைகளை அகற்ற வேண்டியதாயிற்று.


