உலகின் டாப் 5 ஆபத்தான விமான நிலையங்கள்: சிறிய தவறு கூட பேரழிவாக முடியலாம்
உலக அளவில் விமான பயணமானது அதிநவீன மற்றும் வேகமான போக்குவரத்து பயணமாக பார்க்கப்படுகிறது.
மிக நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு விமான பயணம் ஒரு அத்தியாவசிய போக்குவரத்து பயணமாக மாறிவிட்ட நிலையில், சில விமான நிலையங்கள் தரையிறங்குவதற்கு மிகவும் கடினமானதாக உணரப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக விமான நிலையங்களின் குறுகிய ஓடுபாதைகள், தீவிரமான காற்று மற்றும் மலைகளுக்கு இடையிலான விமான நிலையத்தில் அமைவிடம் ஆகியவை பார்க்கப்படுகிறது.

ஆபத்தானதாக கருதப்படும் இந்த விமான நிலையங்களில் தரையிறங்குவது என்பது ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைக்கும் உணர்வாக இருந்து வருகிறது.
உலகின் டாப் 5 ஆபத்தான விமான நிலையங்கள்
- லுக்லா விமான நிலையம் (நேபாளம்)
நேபாள நாட்டில் அமைந்துள்ள டென்சிங் -ஹிலாரி விமான நிலையம் எவரெஸ்ட் மலையேறிகளுக்கான நுழைவு வாயிலாக பார்க்கப்படுகிறது.
லுக்லா என அழைக்கப்படும் இந்த விமான நிலையம் சுமார் 2,860 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
வெறும் 527 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதைகள் இந்த விமான நிலையத்தை உலகின் ஆபத்தான விமான நிலையமாக மாற்றியுள்ளது.
இந்த விமான நிலையத்திற்கான விமானத்தை இயக்குவதற்கு 50-க்கும் குறைவான விமானிகள் மட்டுமே சான்றிதழ் பெற்றுள்ளனர்.
- பரோ சர்வதேச விமான நிலையம்(பூட்டான்)
இமயமலையின் அடிவாரத்தில் பூட்டானில் அமைந்துள்ள பரோ சர்வதேச விமான நிலையம் 2,200 மீட்டர் உயரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தை சுற்றி சுமார் 5,500 மீட்டர் உயரமுள்ள மலைகள் சூழ்ந்துள்ளது.
பரோ சர்வதேச விமான நிலையம் 2,300 மீட்டர் நீளமான ஓடுபாதை கொண்டு இருந்தாலும், குறைந்த தெரிவு நிலை மற்றும் மழை நிழல்கள் காரண்மாக ஆபத்தான விமான நிலையமாக கருதப்படுகிறது.
இந்த விமான நிலையத்திற்கான விமானத்தை இயக்குவதற்கு 50 விமானிகள் மட்டுமே சான்றிதழ் பெற்றுள்ளனர்.

- கோர்செவெல் ஆல்டிபோர்ட் விமான நிலையம்(பிரான்ஸ்)
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் கோர்செவெல் ஆல்டிபோர்ட் விமான நிலையம் அமைந்துள்ளது.
உலகின் மிகச் செங்குத்தான ஓடுபாதையாக அறியப்படும் இது, 13% சாய்வுடன் கூடிய 537 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதையுடன் செயல்படுகிறது.
- மடீரா சர்வதேச விமான நிலையம்(போர்ச்சுகல்)
அட்லாண்டிக் பெருங்கடலின் கடுமையான குறுக்கு காற்று காரணமாக மடீரா சர்வதேச விமான நிலையம் உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மடீரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை 2,777 மீட்டர் நீளமுள்ளது.

- டோன்காண்டின் சர்வதேச விமான நிலையம், (ஹோண்டுராஸ்)
டோன்காண்டின் சர்வதேச விமான நிலையம் டெகுசிகல்பாவின் மலைகளின் நடுவே அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானமானது 45 டிகிரி கோணத்தில் சாய்ந்து தரையிறங்க வேண்டியுள்ளது.
1,989 மீட்டர் நீளம் கொண்ட ஓடுபாதையில் விமானம் தரையிறக்கும் போது சிறிய தவறு கூட பேரழிவாக முடியும் என்பதால் இது உலகின் ஆபத்தான விமான நிலையங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |