டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூட்டறிக்கை
டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவரை உடனடியாக கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக, 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கிரிக்கெட் சாம்பியன்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நமது மல்யுத்த சாம்பியன்கள் தவறான முறையில் கையாளப்படுவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
@AP
கடின உழைப்பு மற்றும் தியாகத்தின் மூலம் பெற்ற பதக்கங்களை, கங்கையில் வீசுவதற்கு முடிவு எடுத்தது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக மல்யுத்த வீரர்கள் எந்த தவறான முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் முன்னாள் சாம்பியன்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே வேளை, மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் கபில்தேவ், சுனில் கவாஸ்கர், மொகிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.