ஈரான் மீது பொறுமையை இழந்து வரும் சீன ஜனாதிபதி.. ட்ரம்ப் எச்சரிக்கை
போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வரும் நிலையில், ஈரானை அழித்தொழிக்கும் நடவடிக்கையைத் தொடர இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
போர் தொடரும்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நாடு திரும்பும் முன்னர், பெய்ஜிங்கின் மிகவும் ரகசியமான வளாகங்களில் ஒன்றில் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.

ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில், ஈரானை அழித்தொழிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பாராட்டியதுடன், போர் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
மத்திய கிழக்கில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும் தாமும் சீன ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் பின்னர் தெரிவித்தார்.
அத்துடன், மிக விரைவில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என இரு நாடுகளும் விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீன ரோஜாக்கள்
மட்டுமின்றி, வக்கிர குணம் கொண்ட முல்லாக்களிடம் ஜி இனிமேலும் பொறுமையாக இருக்கப் போவதில்லை எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பெய்ஜிங்கின் உயர்மட்டத் தலைவர்கள் வசித்து பணிபுரியும், பலத்த பாதுகாப்பு நிறைந்த வளாகமான சோங்னான்ஹாய்க்கு ட்ரம்பை ஒரு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.

அந்தத் தனிப்பட்ட நடைப்பயணத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஜி, பயணம் முழுவதும் ட்ரம்ப் பெரிதும் ரசித்த சீன ரோஜாக்களை அவரே வளர்த்துக்கொள்ளும் வகையில், அவருக்குச் சில விதைகளை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
ஆனால், ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளது போன்று, ஜி ஈரான் தொடர்பில் பொறுமை இழந்து வருவதாக எதையும் குறிப்பிடவில்லை. மட்டுமின்றி, இப்பயணத்திற்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஈரான் முன் எவ்வித நேரடி கோரிக்கைகளையும் முன்வைப்பதைத் சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தவிர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |