ஓடும் பேருந்தில் தீ விபத்து: AC பேருந்தின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்த பயணிகள்
இந்தியாவில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஓடும் பேருந்தில் தீ விபத்து
இந்தியாவின் யமுனா எக்ஸ்பிரஸ்வே(Yamuna Expressway) அருகே உள்ள ஜெவார்(Jewar) பகுதியில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் இருந்து மஹோபா நோக்கி 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு ஏசி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1 பெண் மற்றும் 8 ஆண்கள் உட்பட 9 பேர் உடல் கருகி மற்றும் மூச்சுத்திணறலில் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தின் முன் பகுதியில் இருந்து கடுமையான கருகிய வாடையும், கரும்புகையும் வருவதாக பயணிகள் சிலர் புகார் அளித்தும், பேருந்து ஓட்டுனர் வாகனத்தை ஓரமாக நிறுத்தாமல் பயணத்தை தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பேருந்தின் ஓட்டுநர் அறைக்குள் அதன் ஊழியர்கள் புகைப்பிடித்ததாகவும், அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்தில் தீ பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பேருந்தில் ஏற்பட்ட தீ மற்றும் கரும்புகையை தாங்க முடியாத சில பயணிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 20க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
பேருந்தின் AC யூனிட்டில் ஏற்பட்ட மின் பழுது அல்லது வெடிப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது உயிரிழந்த 9 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.