பிரபல நாட்டின் விமான நிலையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 அப்பாவிகள் பலியான சோகம்
ஏமனின் தற்காலிக தலைநகரான ஏடனில் உள்ள விமான நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக நம்பப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என அந்நாட்டு பிரதமர் முயீன் அப்துல்மலேக் சயீத்தின் கூறியுள்ளார். ஆனால், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
Picture: EPA
ஏடனின் முன்னாள் ஆளுநர் விமான நிலையத்திற்கு வந்தவுடன் இந்த தாக்குதல் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அனால் இந்த சம்பவத்தில் அவர் காயமடையவில்லை.
இதேபோல், 3 வாரங்களுக்கு முன்பு தற்போதைய ஆளுநர் கார் குண்டுவெடிப்புக்கு இலக்காகி மேலும் 6 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னதாக, கடந்த டிசம்பரில் இதே விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் தடத்தப்பட்டு குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு நேற்று (அக்டோபர் 30) நடந்த இந்த குண்டுவெடிப்பு மிக மோசமான தாக்குதலாக கூறப்படுகிறது.
Photo: Saleh Al-Obeidi/AFP via Getty Images
ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் முந்தையை தலைநகரான சனாவை கைப்பற்றியதை அடுத்து, ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் 2014-ஆம் ஆண்டு முதல் ஏடனில் இருந்து நிர்வாகம் செய்துவருகிறது.
அதனைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி ஹூதிகளை தோற்கடித்து ஜனாதிபதி அப்த்ரப்புஹ் மன்சூர் ஹாடியின் ஆட்சியை மீட்டெடுக்க இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியபோது மோதல் தீவிரமடைந்தது.
இந்த சண்டையில் 110,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது; உலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவைத் தூண்டியது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர். அதுபோக, கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நாடு மேலும் பாதிப்படைந்துள்ளது.