கேரள செவிலியரின் மரண தண்டனையை உறுதி செய்த ஏமன் ஜனாதிபதி
கொலை வழக்கில் சிக்கி கடந்த 2017 முதல் சிறையில் இருக்கும் கேரள செவிலியரின் மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்னும் ஒரு மாதத்தில்
ஏமன் நாட்டவர் ஒருவரை கொலை செய்த வழக்கில், அந்த நாட்டில் செவிலியராக பணியாற்றி வந்த நிமிஷா பிரியா என்பவர் கடந்த 2017 முதல் சிறையில் இருந்து வருகிறார்.
தற்போது அவரது மரண தண்டனைக்கு ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் தண்டனை விதிக்கப்பட்டது இந்தியாவுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரியாவின் குடும்பத்தினர் பொருத்தமான வாய்ப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து வருவதை புரிந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.
ஏமன் ஜனாதிபதியின் இந்த முடிவு, நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தாயார் பிரேமா குமாரி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏமன் தலைநகர் சனாவில் தங்கியிருந்துதமது மகளின் மரண தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்காக போராடி வருகிறார்.
கடந்த 2017ல் ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தியைக் கொன்ற வழக்கில் பிரியா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, ஏமனில் உள்ள விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மன்னிப்பைப் பெறுவதை
அன்றிலிருந்து அவரது குடும்பத்தினர் அவரை விடுதலை செய்யக்கோரி போராடி வருகின்றனர். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அவர்கள் ஏமன் உச்ச நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் அவர்களின் மேல்முறையீடு 2023ல் நிராகரிக்கப்பட்டது.
தற்போது, நாட்டின் ஜனாதிபதியும் பிரியாவின் மேல்முறையீட்டை நிராகரித்துள்ளதால், அவரது விடுதலை பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் அவர்களின் பழங்குடித் தலைவர்களிடமிருந்து மன்னிப்பைப் பெறுவதைப் பொறுத்தது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி அப்துல்லா அமீர் என்பவர், பேச்சுவார்த்தைக்கு முந்தைய கட்டணமாக 20,000 அமெரிக்க டொலர் கோரினார். அவருக்கு ஏற்கனவே 19,871 டொலர் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அவர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணமாக 40,000 டொலர் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடனான பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |