12 வயது சிறுவனுக்கு சிறுமியை திருமணம் முடித்து வைத்த குடும்பம்: கூறப்படும் காரணங்கள்
எகிப்தில் 12 வயது சிறுவனுக்கு 10 வயது உறவினர் சிறுமியை திருமணம் முடிக்க முடிவு செய்த குடும்பத்தினரை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
நிச்சயதார்த்த விழா
குறித்த சிறார்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து எகிப்தின் சிறார் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
Image: Newsflash
12 வயது ஜியாத் மற்றும் 10 வயது சாமா ஆகியோருக்கு திரளான குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயதார்த்த விழா முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் புகைப்படங்களை சிறார்களின் பெற்றோர்களே வெளியிட்டு, பெருமையடித்துக் கொண்டுள்ளனர்.
விழாவின் போது சிறுவன் ஜியாத் திருமண மோதிரம் ஒன்றை சிறுமிக்கு அளிக்க, குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். இதனிடையே, விழா தொடர்பில் ஜியாத் தெரிவிக்கையில், தமது சித்தியின் மகளை தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
உரிய வயதில் திருமணம்
மேலும், தமது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இனிமுதல் கடுமையாக உழைக்க இருப்பதாகவும், கல்வியை முடித்து உரிய வயதில் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் எனவும் தெரிவித்துள்ளான்.
Image: Newsflash
நிச்சயதார்த்த விழா தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மொத்த குடும்பமும் தற்போது அந்த விழாவினை ஆதரித்து பேசியுள்ளது.
குடும்பத்தில் மூத்தவரான, மணமகன் ஜியாதின் தாத்தாவே இப்படியான ஒரு ஆலோசனையை முன்வைத்ததாகவும், சகோதரிகளின் பிள்ளைகள் இருவர் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறிருக்க போகிறது எனவும் அந்த தாத்தா கேள்வி எழுப்பியதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சிறார் உதவி மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறார்களுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், ஆபத்தான முன்னுதாரணம் எனவும் குடும்பத்தினருக்கு விளக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறார்களின் திருமணம்
மேலும், நிச்சயதார்த்தம் முடித்துள்ள சிறார்களுக்கு உரிய வயதாகும் வரையில் குறித்த குடும்பத்தினரை கண்காணிக்க இருப்பதாகவும், திருமணம் நடத்தும் திட்டம் இப்போது இருந்தால் அதை கண்டிப்பாக கைவிட வேண்டும் என கோரியதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், அந்த பெற்றோர் தற்போது சிறார்களின் திருமணம் தொடர்பில் முடிவெடுக்கவில்லை எனவும், இருவரையும் தாங்கள் கட்டாயப்படுத்தவில்லை எனவும், அவர்களுக்கு உரிய வயதாகும் போது திருமணம் குறித்து முடிவெடுக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.