துண்டு துண்டாக பிளாஸ்டிக் கவர்களில் கண்டெடுக்கப்பட்ட இளம் கோடீஸ்வரர்: விட்டுச் சென்றுள்ள கோடிக்கணக்கிலான சொத்துக்கள் என்னவாகும்?
வளர்ந்து வரும் உலகத்தின் எலன் மஸ்க் என்று அழைக்கப்பட்டவர் இளம் தொழிலதிபர் ஃபஹிம் சாலே (33).
அமெரிக்காவின் மான்ஹாட்டனில் வசித்துவந்த சாலே, குடும்ப சென்டிமெண்ட் அதிகம் கொண்டவர்.
ஒரு நாள் சாலேயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர தவறியதால் அவரைத் தேடி வந்த அவரது தங்கை, அண்ணன் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு பயந்து அலறியதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
பின்னர் விசாரணையில், டைரீஸ் டேவோன் ஹாஸ்பில் (21) என்ற, சாலேயின் தனிப்பட்ட உதவியாளராக (Personal assistant) இருந்த நபர் சிக்கினார்.
அலுவலகத்திலிருந்து 100,000 டொலர்களை கையாடல் செய்த டைரீஸ் வகையாக சாலேயிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.
சாலே, டைரீஸை மன்னித்து பொலிசில் காட்டிக்கொடுக்காத நிலையிலும், அவர் சாலேயை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
உயிரிழக்கும்போது, சாலே 6 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார்.
எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட சாலே, தனக்கு மரணம் நேரும் என எதிர்பார்க்கததாலோ என்னவோ, உயில் எதையும் எழுதிவைத்திருக்கவில்லை. அவருக்கு திருமணமும் ஆகவில்லை.
ஆகவே, நியூயார்க் சட்டப்படி, அவர் விட்டுச் சென்றுள்ள கோடிக்கணக்கான சொத்துக்கள் அவரது பெற்றோரான ரைஹானா சாலே மற்றும் சாலே உதின் அஹ்மத் ஆகியோரையே சேரும்.
அத்துடன், சாலேயின் தங்கைகளில் ஒருவரான ரிஃபாயத் சாலே என்பவருக்கு சாலேயின் எஸ்டேட்டிலிருந்து வரும் 4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


