ஆற்றில் அடித்துச் சென்றவர் பாறையில் தூங்கிவிட்டு வீடு திரும்பினார்! இது தெரியாமல் இரவு முழுக்க தேடிய பொலிஸ்
ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தேடிய இளைஞர் மதுபோதையில் இரவில் பாறையில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வீடு திரும்பினார்.
கன்னியாகுமரி சுவாரஸ்யம்
தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, அருமனை அருகே மணியங்குழி அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்த 21 வயது தொழிலாளி ஒருவர் தனது இரு நண்பர்களுடன் மது குடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் மூன்று பேரும் பைக்கில் கோதையாற்று கரையான வண்ணம்பாறை பகுதிக்குச் சென்றனர்.
அப்போது அந்த தொழிலாளி ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். ஆற்றில் இறங்க வேண்டாம் என்று நண்பர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்களது பேச்சை கேட்காமல் ஆற்றில் இறங்கி அவர் குளித்துள்ளார்.
பின்னர், அந்த தொழிலாளி காணாமல் போனதை அறிந்த நண்பர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கடையால் பொலிஸாருக்கும் குலசேகரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் வந்து இளைஞரை தேடினர். அப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் வீடு திரும்பினார்.
இதையடுத்து, மறுநாள் காலையில் வீட்டின் கதவை யாரோ ஒருவர் தட்டியுள்ளார். அப்போது தான் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது அவர்களது மகன் தான்.
உடனே அவரை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். அப்போது அந்த தொழிலாளி போதையில் இருந்ததால் அதுபற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை.
இந்த விடயம் எதுவும் தெரியாமல் காலையில் அந்த தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கினர்.
அப்போது அங்கிருந்த பைக்கும் காணவில்லை என்பதால் தொழிலாளியின் வீட்டிற்கு பொலிஸார் விசாரிக்க சென்றனர்.
அங்கு சென்றபோது, அந்த இளைஞர் வந்திருப்பது தெரியவந்து. உடனே, "அங்கு ஆற்றோரத்தில் உங்கள் மகனை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்" என்று கூறி அந்த இளைஞரிடம் நடந்தவற்றை கேட்டனர்.
அதற்கு அந்த இளைஞர், "போதையில் ஆற்றில் குளிக்க இறங்கியதும் தண்ணீர் என்னை அடித்து சென்றுவிட்டது. அப்போது அங்கிருந்த பாறையை பிடித்துக் கொண்டேன். அதன் மீது ஏறி அங்கேயே தூங்கிவிட்டேன். பின்னர் காலையில் எழுந்து வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |