அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக Youtube எடுத்த அதிரடி முடிவு!
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் சேனலை youtube நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் திகதி அதிபர் டொனால்ட் டிரம்பால் தூண்டப்பட்ட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே வரை சென்று பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் பெரும் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டது. அப்போது கலவரங்களுக்கு இடையே அமெரிக்க கேபிடலில் எடுக்கப்பட்ட பல வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்தேறிய இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கடந்த வாரம் தற்காலிகமாக முடக்கப்பட்டது.
மேலும் கலவரத்துக்கு தொடர்புடையவர்களில் கணக்குகளும், அதற்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டவர்களின் கணக்குகளும் தற்காலிகமாக நீக்கப்பட்ட்டது. டுவிட்டர் ஒரு படி மேலே சென்று டிரம்பின் கணக்கை முற்றிலுமாக அழித்தது. பின்னர், கேபிடல் கலவரத்துக்கு தொடர்புடைய 70,000 பேரின் கணக்குகளை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில், Alphabet Inc நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தலமான யூடியூப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சேனலை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான கொள்கையை மீறிய வீடியோவை நீக்கியுள்ளது.
"எங்கள் கொள்கைகளை மீறியதற்காக டொனால்ட் ஜே டிரம்பின் சேனலில் பதிவேற்றப்பட்ட புதிய உள்ளடக்கத்தை அகற்றினோம்" என்றும் டொனால்ட் டிரம்பின் சேனல் இப்போது "குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு புதிய உள்ளடக்கத்தை பதிவேற்றுவதை தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது" என்றும் யூடியூப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், Snapchat மற்றும் Twitch போன்ற சேவைகளும் டொனால்ட் டிரம்பின் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 20-ஆம் திகதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி பிரமாணம் எடுக்கவுள்ள நிலையில், நடுமுழுவதும் 50 மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்களால் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய உளவுத் துறை மாற்றும் எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடுமையான பாதுகாப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.