பெர்லின் அமைதிப் பேச்சுவார்த்தைகள்... ரஷ்யாவிற்கு சாதகமாக ஒரு முடிவெடுத்த ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழியாக மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக நேட்டோ கூட்டணியில் சேரும் நோக்கத்தை உக்ரைன் கைவிட்டுள்ளது.
ஒரு பெரிய மாற்றம்
பெர்லினில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இதைப் பதிவு செய்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகவும் கொடூரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் சந்திப்புகளை முன்னெடுப்பதற்காக ஜேர்மன் தலைநகருக்கு விமானத்தில் பயணித்தபோது ஜெலென்ஸ்கி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
தொடர் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பாக நேட்டோவில் சேர போராடி வந்த உக்ரைன், தற்போது எடுத்துள்ள இந்த நகர்வு ஒரு பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
நேட்டோ விவகாரம் ரஷ்யாவின் போர் நோக்கங்களில் ஒன்றையும் பூர்த்தி செய்கிறது, இருப்பினும் உக்ரைன் இதுவரை ரஷ்யாவிற்கு தங்கள் பிரதேசத்தை விட்டுக்கொடுப்பதற்கு எதிராக உறுதியாகவே உள்ளது.
ஜெலென்ஸ்கி மட்டுமின்றி, மற்ற ஐரோப்பிய தலைவர்களும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்காக ஜேர்மனிக்கு வர உள்ளனர். நேட்டோ உறுப்பினர் பதவிக்கு பதிலாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைனின் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, உக்ரைனின் விருப்பம் நேட்டோவில் சேருவதாக இருந்தது, இவை உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சில நாடுகள் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அது ரஷ்யாவிற்கு பாதகமாக அமையும் என்பதாலையே ட்ரம்ப் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வெற்றி
இந்த நிலையில், தற்போது உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாதங்கள், அமெரிக்காவிடமிருந்து பிரிவு 5 போன்ற உத்தரவாதங்கள் மற்றும் ஐரோப்பிய சகாக்கள் மற்றும் கனடா, ஜப்பான் போன்ற பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்டவை மற்றொரு ரஷ்ய படையெடுப்பைத் தடுக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

நேட்டோ விவகாரம் உக்ரைன் பங்கிலிருந்து ஒரு உறுதிப்பாடாகும் ஆனால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் சட்டப்பூர்வமாக உறுதியளிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் தனது நேட்டோ நோக்கங்களை உத்தியோகப்பூர்வமாக கைவிட வேண்டும் என்றும், உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸின் சுமார் 10% பகுதியிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பலமுறை கோரியுள்ளார்.

தற்போது ஜெலென்ஸ்கியின் இந்த உறுதிப்பாடு ரஷ்யாவின் வெற்றி என்றே கூறப்படுகிறது. மேலும், உக்ரைன் ஒரு நடுநிலை நாடாக தொடர வேண்டும் என்றும், உக்ரைனில் எந்த நேட்டோ துருப்புக்களையும் களமிறக்க முடியாது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
முன்னதாக, கண்ணியமான அமைதி ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீண்டும் உக்ரைனைத் தாக்காது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |