ஜெலென்ஸ்கி சர்வாதிகாரி... உக்ரைன் நாடே மிஞ்சாது: கோபத்தின் உச்சத்தில் டொனால்டு ட்ரம்ப்
ரஷ்யாவுடன் போர் நிறுத்த அமைதிப்பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி மிக விரைவாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அல்லது உக்ரைன் என்ற நாடே மிஞ்சாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கொக்கரித்துள்ளார்.
பணியவைக்க முடியாது
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சர்வாதிகாரி என அடையாளப்படுத்தியுள்ள டொனால்டு ட்ரம்ப், தேர்தல் இல்லாமல் நாட்டை ஆள அவர் திட்டமிடுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் போருக்கு முதன்மை காரணமே ஜெலென்ஸ்கி என டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளதற்கு, ரஷ்யாவின் பொய்களில் டொனால்டு ட்ரம்ப் சிக்கிக் கொண்டுள்ளார் என ஜெலென்ஸ்கி பதிலளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, உக்ரைன் நாடே மிஞ்சாது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha தெரிவிக்கையில், உலகின் எந்தவொரு நாடும் தங்களை கட்டாயப்படுத்தி பணியவைக்க முடியாது என்றார்.

ட்ரம்பின் நகர்வு தோல்வியில் முடியும்... அமெரிக்கா - ஐரோப்பா போர் மூளும் அபாயம்: புடின் ஆதரவாளர் எச்சரிக்கை
மட்டுமின்றி, எங்கள் இருப்பு உரிமையை நாங்கள் பாதுகாப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுடன் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைகிறது.
ஆனால் 2022 பிப்ரவரியில் ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து அமுலுக்கு கொண்டுவந்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் முன்னெடுக்க வாய்ப்பில்லை. ஆனால் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் தேர்தல் முன்னெடுக்கப்படும் என்றே ஜெலென்ஸ்கி தரப்பு கூறி வருகிறது.
இதனிடையே, ரஷ்யாவுடன் ஒருபோதும் உக்ரைன் போரை முன்னெடுத்திருக்கக் கூடாது என ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறிய கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் ட்ரம்பின் உக்ரைன் தூதர் கீத் கெல்லாக் என்பவரை புதன்கிழமை சந்தித்துள்ள ஜெலென்ஸ்கி, உண்மையை எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும், தனது ஒப்புதல் மதிப்பீடு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே என்ற ட்ரம்ப்பின் கூற்று ரஷ்யா அளித்துள்ள தவறான தகவல் என்றும், தம்மை பதவியில் இருந்து நீக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவை தனிமைப்படுத்தும்
அமெரிக்காவும் ரஷ்யாவும் மட்டும் தனியாக அமைதிப்பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததன் பின்னணி இதுவென்றும், ரஷ்யாவின் பொய்களை துரதிர்ஷ்டவசமாக ட்ரம்ப் நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி தொடக்கத்தில் கீவ் சர்வதேச சமூகவியல் கல்வி நிலையம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் 57 சதவிகித உக்ரைன் மக்கள் ஜெலென்ஸ்கியை நம்புவதாகவே தெரிய வந்துள்ளது.
ஆனால், ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே, ட்ரம்ப் உக்ரைன் மற்றும் ரஷ்யா மீதான அமெரிக்காவின் கொள்கையை மாற்றியுள்ளார்.
அத்துடன் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் போக்கை முடிவுக்கு கொண்டுவந்தார். மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதுடன், சவுதி அரேபியாவில் இருநாட்டு மூத்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரை ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியாக அமெரிக்கா சுமார் 100 பில்லியன் டொலர் மட்டுமே செலவிட்டுள்ள நிலையில், அது 350 பில்லியன் டொலர் என ட்ரம்ப் எந்த ஆதராமும் இன்றி கூறி வருகிறார்.
மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 500 பில்லியன் டொலர் மதிப்பிலான உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் நிபந்தனை வைத்துள்ளார்.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியால் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் கனிம வளங்களுக்கு ஈடாக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ட்ரம்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றே ஜெலென்ஸ்கி தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |