மாஸ்கோ தீக்கிரையாகும்... ரஷ்யாவிற்கு கடும் மிரட்டல் விடுத்த ஜெலென்ஸ்கி
இந்த வாரம் கீவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மடாலயத்தை சேதப்படுத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே ரஷ்யா மீது கடுமையான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
தீக்கிரையாகும்
ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்தால் மாஸ்கோ நகரம் தீக்கிரையாகும் என்றும் அவர் எச்சரித்தார். நேற்றிரவு மாஸ்கோவை குறிவைத்து ஏராளமான ட்ரோன்கள் தாக்கியதில், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ரஷ்ய தலைநகரின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தாக்கப்பட்டது.

நாங்கள் இந்தப் போரை விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பியதும் இல்லை; இது அனைவருக்கும் தெரியும், எங்கள் கூட்டாளிகளுக்கும் தெரியும் என்று செய்தியாளர்களுக்கு அனுப்பிய குரல்வழிச் செய்தியில் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், உக்ரைன் தாக்கப்படும் என்றால், உங்கள் மாஸ்கோ நகரமும் தீக்கிரையாகும் என அவர் எச்சரித்துள்ளார். 1,000 ஆண்டுகள் பழமையான கீவ் பெச்செர்ஸ்க் லாவ்ரா (Kyiv Pechersk Lavra) மடாலயத்தைச் சேதப்படுத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், உக்ரைன் முழுவதும் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.
தடைகள்
உக்ரைனின் ராணுவக் கூட்டாளிகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜெலன்ஸ்கி வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருந்தார். நேட்டோ (NATO) திட்டம் ஒன்றின் மூலம் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்தும், உக்ரைன் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

விளாடிமிர் புடினைப் போரை முடிவுக்குக் கொண்டுவர நிர்பந்திக்கும் வகையில், ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகள் மற்றும் அதன் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது தடைகளை விதிப்பதன் மூலம் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்குமாறு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
புடின் மீது அனைவரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்: உக்ரைனியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ரஷ்யர்கள் என அனைவரும் - இது யதார்த்தத்தை உணர்ந்து, தங்கள் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நேரம் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |