கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
Zelensky accuses Russia of using cluster bombs: உக்ரைனிய தலைநகர் கீவ் மீது கிளஸ்டர் குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்
உக்ரைனிய தலைநகர் கீவ் மீது கிளஸ்டர் குண்டுகளை சுமந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் வானிலேயே வெடித்து சிதறியதோடு, அதிலிருந்து 400 மீட்டர் சுற்றளவுக்கு கிளஸ்டர் குண்டுகள் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஒரு ஏவுகணை தலைநகர் கீவ்வின் வரலாற்று சிறப்புமிக்க பெச்செர்ஸ்க் பகுதியில் விழுந்து மிகப்பெரிய தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கீவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலயத்தின் கட்டிடங்கள், குடியிருப்பு வீடுகள், கடைகள், உணவகங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன.
தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் எந்தவொரு ராணுவ மையங்களும் இல்லாத நிலையில், பொதுமக்களுக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தவே ரஷ்யா இந்த தாக்குதலை முன்னெடுத்து இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நட்பு நாடுகளிடம் இருந்து வான்வழி தடுப்பு ஆயுதங்கள் கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தை ரஷ்யா தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.