ட்ரம்பிடம் 50 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம் கேட்ட ஜெலென்ஸ்கி
உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப்பிடம் பேசிய விடயங்களை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.
சமாதானத் திட்டம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Mar-a-Lago கிளப்பில், ஜனாதிபதிகள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே சந்திப்பு நடந்தது.
ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமைதியைக் கொண்டுவர, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க ட்ரம்ப் தனது தனிப்பட்ட கிளப்பிற்கு அவரை அழைத்ததன் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) பேசினார்.
அவர் முன்மொழியப்பட்ட சமாதானத் திட்டம் குறித்த தனது கோரிக்கைகளை விரிவாக தெரிவித்தார்.
அடுத்த நாட்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான சந்திப்பை உக்ரைன் விரும்புவதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு உத்தரவாதம்
20 அம்ச உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடந்த விவாதங்கள் குறித்து, ட்ரம்ப் தனக்கு தெரிவித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
அவர் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை கோரியதாக ஜெலென்ஸ்கி மேலும் குறிப்பிட்டார்.

சமாதானத் திட்டம் கையெழுத்திடப்படும் தருணத்தில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி தனது சமாதானத் திட்டத்தில் உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட வேண்டும் என்றும், அதற்காக ஒரு தொழில்நுட்பக் குழு தேவைப்படலாம் என்றும் கூறினார்.
அத்துடன் ரஷ்யாவுடனான எந்தவொரு தகவல் தொடர்பு வடிவத்திற்கும் உக்ரைன் தயாராக இருப்பதாக அறிவித்த அவர், சமாதானத் திட்டத்தை உக்ரைனில் ஒரு பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அத்தகைய பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு குறைந்து 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்திய ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தக் கண்காணிப்பு தொடர்பான விவரங்கள் பாதுகாப்பு உத்தரவாதங்களில் தெளிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |