ரஷ்யாவுக்காக... 155 சீன வீரர்கள்: கடவுச்சீட்டு தரவுகளுடன் ஜெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக குறைந்தது 155 சீன குடிமக்கள் போரிடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொறுப்பற்ற கருத்து
இந்த வார தொடக்கத்தில் இரண்டு சீன போராளிகள் பிடிபட்டதை அடுத்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு சீனா உதவிகள் வழங்குவதாக குறிப்பிட்டு உக்ரைன் முன்வைக்கும் முதல் உத்தியோகப்பூர்வ குற்றச்சாட்டு இதுவாகும்.
பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, தனது அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், போரில் இன்னும் பல எண்ணிக்கையிலான சீன நாட்டினர் ஈடுபட்டுள்ளனர் என்ற தனது கருத்தை ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், சீனாவின் பங்கை சரியாகவும் நிதானமாகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உக்ரைன் நெருக்கடியை உருவாக்கியதோ அல்லது அதற்கு சீனா ஒரு தூண்டுதலோ அல்ல என்றும், நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காண்பதில் தீவிர ஆதரவாளராகவும் தீவிரமாகவும் இருப்பதாக சீனா பதிலளித்துள்ளது.
ஏற்கனவே, உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்றே சீனா புறந்தள்ளியுள்ளது. ஆனால் அதன் பின்னரே சீன வீரர்கள் இருவர் உக்ரைன் படைகளால் கைது செய்யப்பட்டனர்.
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் ஆறு சீன வீரர்களுடன் சண்டையிட்டு இரண்டு கைதிகளை பிடித்ததாக ஜெலென்ஸ்கி கூறினார். ஆனால், இதற்கு பதிலளிக்க சீனா முன்வரவில்லை.
சீன விவகாரம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், கடவுச்சீட்டு தரவுகளுடன், 155 சீன வீரர்களின் முழுத் தகவல்களையும் உக்ரைன் அரசாங்கம் திரட்டியுள்ளதாக ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய சிக்கலை
ரஷ்யா சமூக ஊடகங்கள் மூலம் சீன குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்து வந்தது, மேலும் இந்த விவகாரம் சீன அரசாங்கத்திற்கும் தெரியும் என்றும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் கருத்துகளின் அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் உக்ரைனில் உள்ள போர்க்களத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மாஸ்கோவில் பயிற்சி பெறுகிறார்கள், அத்துடன் இடம்பெயர்வு ஆவணங்கள் மற்றும் உரிய சம்பளத்தையும் பெறுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் எஞ்சிய உலக நாடுகளும் தங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என ஜெலென்ஸ்கி கோரியுள்ளார். இதனையடுத்து பதிலளித்துள்ள அமெரிக்கா, ரஷ்யாவுக்காக சீன வீரர்கள் போராடுவதாக வரும் செய்திகள் புதிய சிக்கலை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு என அதிக வெடிமருந்துகள், கவச வாகனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிக்க சீனா உதவி செய்வதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |