ரஷ்யா ஏவிய 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: முன்கூட்டியே எச்சரிக்கவில்லை - ஜெலென்ஸ்கி பகிரங்க குற்றச்சாட்டு
Zelensky claims no early warning from allies: உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நட்பு நாடுகளை கடுமையாக சாடியுள்ளார்.
ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்போவது குறித்து நட்பு நாடுகள் எச்சரிக்கவில்லை என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஏவுகணைத் தாக்குதல்
உக்ரைனின் தலைநகர் கீவ்வில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் மருத்துவ வசதி கொண்ட கட்டிடம் ஒன்றும், குடியிருப்பு அல்லாத மற்றொரு கட்டிடமும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) நட்பு நாடுகளை குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "நேற்றிரவு பல அலைகளாக மற்றொரு ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் ஒருமுறை, எங்கள் நட்பு நாடுகளிடம் இருந்து எந்த முன் எச்சரிக்கையும் வரவில்லை. கீவ் மற்றும் கீவ் பிராந்தியத்தின் மீது திட்டமிட்ட தாக்குதலில் ரஷ்யா 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் அமெரிக்காவின் உயர்மட்டத் தூதர்களுடன் ஜெலென்ஸ்கி பேசிய நிலையில் இந்த தாக்குதல் ரஷ்யாவிடம் இருந்து நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
