இன்னும் இரண்டு வாரங்களில்... புடின் - ஜெலென்ஸ்கி தொடர்பில் உறுதி செய்த ஜனாதிபதி ட்ரம்ப்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேருக்கு நேர் சந்தித்து, விவாதிக்க தாம் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
ட்ரம்பின் செயற்பாடு
ஜனாதிபதி ட்ரம்புடனான சிறப்புமிக்க ஓவல் அலுவலக சந்திப்பில், இரு ஜனாதிபதிகளும் பாராட்டுகளையும் வாக்குறுதிகளையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
தொடக்கத்திலேயே, உக்ரைன் சிறார்கள் தொடர்பில் மெலனியா ட்ரம்பின் கடிதம் தொடர்பில் ஜெலென்ஸ்கி பாராட்டுதலையும் நன்றியையும் பதிவு செய்ய, அதன் பின்னர் ட்ரம்பின் செயற்பாடுகளின் மாற்றம் ஏற்பட்டது என்றே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தி உக்ரைன் போருக்கு முழு காரணம் ஜெலென்ஸ்கி மட்டுமே என ட்ரம்பும் அவருடன் சில அமைச்சர்களும் குற்றஞ்சாட்டி ஓவல் அலுவகத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.
ஆனால் புத்திசாலியான ஜெலென்ஸ்கி இந்த முறை, ட்ரம்பை எதிர்கொள்ள தயார் நிலையிலேயே சென்றுள்ளார். அத்துடன், உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக வாக்குறுதியை ட்ரம்பிடம் இருந்து ஜெலென்ஸ்கி பெற்றுள்ளார்.
நாங்கள் உக்ரைனுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குவோம் என்று முதல் முறையாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இது அலாஸ்கா சந்திப்புக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம் என்றும் கூறப்படுகிறது.
முடிவுக்கு கொண்டுவர
இதனிடையே, உக்ரைனின் 20 சதவீத நிலம் தற்போது ரஷ்யா கட்டுப்பாடில் உள்ளது என்பதை போர்க்கள வரைபடம் ஒன்றில் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, பிரதேச பரிமாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.
அத்துடன் அனைத்தும் முறையாக அமைந்தால் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருப்பதாகவும், போரை முடிவுக்கு கொண்டுவர அது வாய்ப்பாக அமையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில், அந்த சந்திப்பு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரோம், மாஸ்கோ அல்லது ஜெனீவா ஆகிய நகரங்களில் ஒன்றில் சந்திப்பு நடத்த ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |