நேருக்கு நேர்... ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு பகிரங்க அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புது முயற்சியாக, தனக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையே நேருக்கு நேர் சந்திப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
முழுமையான போர்நிறுத்தம்
ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்தில், ஐரோப்பாவில் நடக்கும் போர் மீண்டும் அமெரிக்காவின் கவனத்தின் மையமாக மாறும் வரை வெறுமனே காத்திருப்பது தவறானது என்றும்,
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலமே அமைதி ஏற்பட முடியும் என்றும் ஜெலென்ஸ்கி பதிவு செய்துள்ளார்.

மேலும், முன்மொழியப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலம் முழுவதும் முழுமையான போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ஆனால், வியாழக்கிழமை ஏற்கனவே புடின் இதனை நிராகரித்திருந்தார்.
இதனிடையே, இரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டால் அது சிறப்பாக இருக்கும் என்று தான் கருதுவதாக டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜெலென்ஸ்கியின் கடிதம் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும், அது குறித்துப் புடினுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
கடிதம் தொடர்பில் தெரிந்துகொள்ளும் முன்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், உக்ரைனுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்குத் தாம் நிச்சயமாகத் தயாராகவும் விருப்பத்துடனும் இருப்பதாகப் புடின் கூறினார்; ஆனால், அதற்காக சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேரடி ஈடுபாட்டின் மூலம்
ரஷ்யா பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இதனிடையே, ஈரான் போர் தொடங்கியதாலும், ஜெனீவா, அபுதாபி மற்றும் இஸ்தான்புல்லில் நடைபெற்ற முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாலும், கடந்த சில மாதங்களாகப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளன.
1,800-க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில், ஜெலென்ஸ்கி குறிப்பிடுகையில், உங்கள் போர் எங்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பிறகு, ரஷ்ய வீரர்களின் கதியைப் பற்றி உக்ரைனில் உள்ள நாங்கள் கவலைப்படுகிறோம் என்றெல்லாம் இல்லை.

ஆனால், நான் உக்ரேனியர்கள் மீது அக்கறை கொண்டுள்ளேன். நாங்கள் எங்கள் மக்களை இழந்து வருகிறோம்; ஒவ்வொரு இழப்பும் எங்களுக்கு வேதனையானது. இந்தப் போரிலிருந்து வெளியேறுவது தொடர்பில் அஞ்சாதீர்கள். அதுதான் தற்போது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பிரதானமான காரியம், என்றும் ஜெலென்ஸ்கி வேண்டுதல் விடுத்தார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நேரடி ஈடுபாட்டின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முன்மொழிவதாக அவர் கூறினார். மட்டுமின்றி, சுவிட்சர்லாந்து அல்லது துருக்கி போன்ற நாடுகளில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |