புடினின் நண்பர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல்
ரஷ்யாவில் செஞ்சதுக்க விழாவிற்காக புடினால் அழைக்கப்பட்ட வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மூன்று நாட்கள்
இரண்டாம் உலகப்போர் வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மே மாதம் 9ம் திகதி ரஷ்யாவில் விழா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக மூன்று நாள் போர்நிறுத்தத்திற்கான அழைப்பை ரஷ்யா விடுத்திருந்தது. ஆனால் அந்த அழைப்பை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்திருந்தார்.
போர் நிறுத்தம் ஏற்பட்டால் அது நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், ரஷ்யாவில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. அவர்கள் உங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறார்கள், எனவே நாங்கள் உங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க மாட்டோம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில் அமெரிக்காவும் உக்ரைனும் 30 நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையை புடினிடம் முன்வைத்தது. ஆனால் அதற்கான பதிலை அவர் இதுவரை வெளியிடவில்லை.
மாறாக போர் வெற்றி தினத்தின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் முன்னெடுக்கும் விழாவிற்காக மூன்று நாட்கள் போர் நிறுத்தம் வேண்டும் என புடின் கோரிக்கை வைத்தார். அதற்கு உக்ரைன் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள்
மே 9 ஆம் திகதி, இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதன் 80 வது ஆண்டு நிறைவை ரஷ்யா கொண்டாட உள்ளது. விழாக்களின் மைய நிகழ்வு மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெறும் அணிவகுப்பாக இருக்கும்.
இந்த விழாவிற்காக 20 நாடுகளின் தலைவர் ரஷ்யா செல்ல உள்ளனர். சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங், பெலாரஸ், செர்பியா மற்றும் வெனிசுலாவின் ஜனாதிபதிகள், ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ, இந்தியா தரப்பில் அமைச்சர்கள் சிலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனிடையே, ஜெலென்ஸ்கியின் அச்சுறுத்தல் உண்மை என்றால் உக்ரைன் தலைநகரில் மே 10 ஆம் திகதி விடியலுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள் என ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் டிமித்ரி மெத்வெதேவ் மிரட்டல் விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |