நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம்! அமெரிக்காவில் சபதமிட்ட ஜெலென்ஸ்கி
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என சபதமிட்டார்.
ஜெலென்ஸ்கியின் அமெரிக்க பயணம்
அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
அப்போது ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம், 'இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை மற்றும் நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களை மட்டுமன்றி அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது' என தெரிவித்தார்.
@AP Photo
சபதமிட்ட ஜெலென்ஸ்கி
அதனைத் தொடர்ந்து ஜெலென்ஸ்கி பேசும்போது, 'எங்களுக்கு அமைதி வேண்டும். இதற்கான 10 அம்ச திட்டத்தை வழங்கி உள்ளேன். அதுபற்றி ஜனாதிபதி ஜோ பைடனிடம் விவாதித்தேன். இது இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கூட்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை தரும் என நம்புகிறேன்.
ரஷ்யா எங்கள் மீது ஏவுகணைகளால் தாக்கினால், நாங்கள் எங்களை பாதுகாக்க எங்களால் முடிந்ததை செய்வோம். எங்கள் போர் உயிருக்கானது மட்டுமல்ல, சுதந்திரத்திற்கானது. உக்ரைன் மக்களின் பாதுகாப்பிற்கானது.
@Carolyn kaster/AP/Picture Alliance
இந்த போரானது என்னவிதமான உலகத்தில் எங்கள் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் வாசிக்கப்போகின்றன என்பதை வரையறை செய்யும். உக்ரைன் உயிருடன் தான் இருக்கிறது. நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம். நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம். அமெரிக்கா எங்களுக்கு வழங்கும் ராணுவ உதவி தொண்டு அல்ல, இது எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு ஆகும்' என தெரிவித்தார்.
@Carolyn kaster/AP/Picture Alliance
வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பயணத்தையொட்டி, உக்ரைனுக்கு 1.85 பில்லியன் டொலர் பாதுகாப்பு உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.