ஐரோப்பாவிற்கு துணிச்சல் இல்லை... உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடும் தாக்கு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைக் கையாள்வதில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனவுறுதி இல்லாத தன்மையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
முடிவுக்கு வரவிருக்கிறது
டொனால்ட் ட்ரம்புடன் தனக்கு மிகச் சிறந்த சந்திப்பு நடந்ததாகக் கூறிய ஜெலென்ஸ்கி, சமாதான ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை டாவோஸில் பேசிய உக்ரேனிய ஜனாதிபதி, ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்ததாகக் கூறினார். இருவரும் ஆவணங்களைப் பற்றியும் வான் பாதுகாப்புப் பற்றியும் விரிவாகப் பேசியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பும், இந்த சந்திப்பு தொடர்பில் நேர்மறையாகக் கருத்து தெரிவித்துள்ளதுடன், இந்தப் போர் முடிவுக்கு வரவிருக்கிறது என்றார். உக்ரைன் ஜனாதிபதி உலகப் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையில்,
நாங்கள் ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்தோம், எங்கள் குழுக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகின்றன. இது எளிதான காரியம் அல்ல. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ஆவணங்கள் ஏறக்குறைய தயாராகிவிட்டன என்றார்.
அத்துடன் விளாடிமிர் புடின் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மனவுறுதி இல்லாத தன்மையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ரஷ்யா மீதான குற்றவியல் விசாரணைகளில் ஐரோப்பா செயலற்ற நிலையில் இருப்பதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மட்டுமின்றி, ஐரோப்பா செயல்பட மறுக்கும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ஏன் ரஷ்யாவின் கடத்தல் எண்ணெய் கப்பல்களை முற்றுகையிட்டு,பறிமுதல் செய்ய வேண்டும்?

ஆயுதப் படை தேவை
புடினிடம் பணம் இல்லையென்றால், ஐரோப்பாவில் போர் இல்லை என்பது நிதர்சனம் என்றார். ரஷ்ய எண்ணெய் ஐரோப்பியக் கடற்பகுதிகளை ஒட்டியே கொண்டு செல்லப்படுகிறது. அந்த எண்ணெய் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கிறது, அந்த எண்ணெய் ஐரோப்பாவை நிலையற்றதாக்க உதவுகிறது.
ஐரோப்பாவிடம் பணம் இருந்தால், அதனால் தன் மக்களைப் பாதுகாக்க முடியும். தற்பொழுது, அந்த எண்ணெய் கப்பல்கள் புடினுக்குப் பணம் ஈட்டித் தருகின்றன, அதன் விளைவாக ரஷ்யா தனது கேவலமான திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது என்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவைப் பாதுகாக்க, அதற்கு ஒரு ஒன்றுபட்ட ஆயுதப் படை தேவை என்று ஜெலென்ஸ்கி கூறினார். நாம் ஒன்றுபட்டால் உண்மையிலேயே அசைக்க முடியாதவர்களாக இருப்போம்,
மேலும் ஐரோப்பா தாமதமாகப் பதிலளிக்கும் சக்தியாக இல்லாமல், எதிர்காலத்தை வரையறுக்கும் ஒரு உலகளாவிய சக்தியாக மாற முடியும், மாற வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |