பிரித்தானிய பிரதமர் வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த ஜெலென்ஸ்கி: இது தான் திட்டம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கையாள்வதற்கான திட்டத்தை வகுக்க, பிரித்தானியாவின் பிரதமராகும் போட்டியில் இறுதி சுற்றில் முன்னணியில் இருக்கும் இருவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
உக்ரைனுக்கு போரிஸ் ஜோன்சன் இதுவரை அளித்து வந்த ஆதரவு போன்று, புதிதாக பிரித்தானியாவில் பிரதமராகும் நபர் முன்னெடுப்பாரா என்பது தொடர்பில் தெரிந்துகொள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, உக்ரைனுக்கு அவர்களை அழைத்துள்ள ஜெலென்ஸ்கி, உலக நாடுகளுக்கு ரஷ்யா தொடர்பில் அவர்களின் திட்டம் குறித்து அறிவிக்க கோரியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி சார்பில் குறித்த அழைப்பை நாடாளுமன்ற உறுப்பினர் Oleksii Goncharenko விடுத்துள்ளார். மேலும், முக்கிய தலைவர்களுக்கும் இந்த விவகாரம் தொடர்பில் Oleksii Goncharenko கடிதம் எழுதியுள்ளார்.
போரிஸ் ஜோன்சன் உக்ரைன் மக்களுக்காக அவர்களின் இக்கட்டான நிலையில் ஆதரவளித்து உடனிருந்தார். மட்டுமின்றி உலக அரங்கில் உக்ரைனுக்காக பரிந்து பேசினார்.
அதே போன்று பிரித்தானியாவின் புதிய பிரதமரும் உக்ரைனுடன் நட்பு பாராட்ட வேண்டும் எனவும், தேவையான வேளையில் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.