அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல்
உக்ரைன் போர் தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் முன்வைக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.
புடினின் கோரிக்கை
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் தொடக்கத்திலேயே ரஷ்யா முன்வைத்துவரும் அதே கோரிக்கைகளையே ஜனாதிபதி ட்ரம்பும் தற்போது முன்வைத்து வருகிறார்.

ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது விளாடிமிர் புடினின் கோரிக்கை. ஆனால் ஜெலென்ஸ்கி உட்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலர் அதை ஏற்க மறுத்துள்ளனர்.
இதனாலையே, சமாதான ஒப்பந்தம் இதுவரை அமுலுக்கு வரவில்லை. உக்ரைனில் பொருளாதார வளம் மிகுந்த பகுதிகளையே ரஷ்யா குறிவைத்துள்ளது.
ஆனால், எந்தவகையிலும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா தற்போது ரஷ்யாவின் கோரிக்கைகளை சமாதான ஒப்பந்தமாக முன்வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது. 28 அம்சங்கள் கொண்ட ஒரு ஆவணத்தை ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி தெரிவிக்கையில், நீடித்த அமைதியை உறுதி செய்வதற்காக இரு தரப்பினருக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது இந்த திட்டம் என்றார்.
ஆனால், சமாதான ஒப்பந்தம் தொடர்பில் உக்ரைன் நிர்வாகத்திடம் அமெரிக்கா தரப்பு கலந்தாலோசிக்கவில்லை என்பதுடன், மேலோட்டமாக தகவலை மட்டுமே பகிர்ந்துகொண்டுள்ளது.

வரைவு ஒப்பந்தம் உருவாக்கும் குழுவில் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைனுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ரஷ்யாவிற்கு சாதகமாக உள்ள இந்த சமாதான ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி ஏற்றுக்கொள்ள மறுத்தால், டர்ம்பின் நடவடிக்கை கடுமையாக இருக்கலாம் என்றே ரஷ்ய தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

ஜெலென்ஸ்கி வீர மரணம்
ஜெலென்ஸ்கி ஜனாதிபதி பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படலாம், அது அமெரிக்கா அல்லது குறிப்பிட்ட சில நாடுகளின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் அல்லது அரசியல், சர்வதேச ஊடக நெருக்கடியால் நிகழலாம் என்றும் கூறுகின்றனர்.
அத்துடன், ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவரை பதவி விலக வைக்கவும் திட்டம் தீட்டப்படுகிறது என்றும் தகவல் கசிந்துள்ளது. மேலும், அவருக்கு இருக்கும் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அழுத்தம் அளிக்கப்படலாம் என்றும்,

கடைசியாக ஜெலென்ஸ்கி வீர மரணம் அடைந்தார் என்ற தகவல் கூட வெளிவர வாய்ப்புள்ளதாக ரஷ்யாவிற்கு ஆதரவான அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சமாதான ஒப்பந்தம் தொடர்பில் கசிந்த தகவலின் அடிப்படையில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு ஜெலென்ஸ்கி முயற்சிகள் முன்னெடுத்து வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |