உக்ரேனியர்கள் உயிரிழப்பிற்கு நேட்டோ கூட்டமைப்பே காரணம்: ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் வான்பரப்பை பறக்க தடை விதிக்கப்படும்(no-fly zone) பகுதியாக அறிவிக்க நேட்டோ பாதுகாப்பு அமைப்பு மறுத்திருப்பது, பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிய அனுமதி வழங்கி இருப்பதுபோல் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைனை நாட்டை ஏவுகணைகள், போர் விமானங்கள், டாங்கிகள் என பலவற்றின் மூலம் அங்குள்ள குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் என அனைத்தின் மீதும் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இதனால் ரஷ்யாவின் இந்த வான்வழி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பொதுமக்கள் மற்றும் உக்ரைன் ராணுவத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் இந்த வான்வழி தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்காக, உக்ரைன் வான்பரப்பில் போர் விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என நேட்டோ பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் கடுமையாக வலியுறுத்தி வந்தது.
இதனை தொடர்ந்து, உக்ரைனின் இந்த பறக்க தடைவிதிக்கும் மண்டலம்(no-fly zone) கோரிக்கையை நேட்டோ அமைப்பு செயல்படுத்த முடியாது என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டோல்டன்பெர்க்யும், உக்ரைன் இந்த கோரிக்கையை ஏற்பது என்பது அது போர் சூழலை மேலும் அதிகரிக்க செய்யும், மேலும் அது ஐரோப்பிய பிராந்தியத்திலும் போரை பரவச்செய்யும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், நேட்டோவின் இந்த அறிவிப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதில் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைனில் இன்று இறக்கும் மற்றும் நாளை இறக்கவிருக்கும் அனைத்து உயிர்களுக்கும் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையின் குறைபாடுகளே காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும் நேட்டோ அமைப்பின் இந்த அறிவிப்பு உக்ரைனியர்கள் மீது குண்டுமழை பொழிய அனுமதி வழங்கி இருப்பதுபோல் உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.