போரில் முதல்முறை - ரோபோட்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
ரஷ்ய வீரர்கள் ரோபோட்களிடம் சரணடைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர்
கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், 4 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வருகிறது.
இந்த போரில், காயமடைந்த வீரர்களை மீட்பதற்கும், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தற்போது பாதுகாப்பான தூரத்திலிருந்து மனிதர்களால் இயக்கப்படும் தரைவழி ரோபோ அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஜேர்மனி உடன் ஒரு ட்ரோன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்காக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஜேர்மனி சென்றுள்ளார்.
ரோபோட்களிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள்
அங்கு பேசிய அவர், இந்த போரில் முதல்முறையாக ட்ரோன் மற்றும் ரோபோட் உள்ளிட்ட ஆளில்லா தரை அமைப்புகளை மட்டுமே பயன்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதில், ஒரு ரோபோட் அவர்களின் நிலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக அழிக்கப்பட்ட கோட்டைகளிலிருந்து ரஷ்யர்கள் வெளியே வந்து சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 மாதங்களில் முன்னணிப் பகுதிகளில் ட்ரோன்கள் 22,000 க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டுள்ளன என்றும், இதனால் ஏராளமான வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
"உக்ரைனின் பாதுகாப்புத் தொழில்துறையை விட வேறு எந்தத் தொழில்துறையும் இவ்வளவு புதுமையானதாக மாறவில்லை" என ஜேர்மன் சேன்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறினார்.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியதில் இருந்து, ஜேர்மனி 55 பில்லியன் யூரோக்களை (64 பில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது. மேலும், நடப்பு வரவுசெலவுத் திட்டத்தில் 11.5 பில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |