ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு
உலக நாடுகளின் கவனம் மத்திய கிழக்கிற்கு திரும்பியுள்ள நிலையில், இது உக்ரைனுக்கு நல்லதல்ல என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்கின் மீது திரும்பும் உலக நாடுகளின் கவனம்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் பாரிஸில் நடைபெற்ற இராஜதந்திர சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டனர்.
அப்போது, உலக நாடுகளின் கவனம் மத்திய கிழக்கு நோக்கி மாறுவதால் உக்ரைனுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக் கொண்டார்.
அதில், உலக நாடுகளின் கவனம் மத்திய கிழக்கின் நாடுகள் மீது திரும்புவது உக்ரைனின் உடனடி நலன்களுக்கு நல்லதல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொள்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் 20 வது பொருளாதார தடையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா சமீபத்தில் தளர்த்தி இருந்த நிலையில், உக்ரைனிய ஜனாதிபதியின் இந்த சமீபத்திய கோரிக்கை வந்துள்ளது.
உலக நாடுகளுக்கு உதவும் உக்ரைன்
இந்த சந்திப்பின் போது, நவீன ட்ரோன் போர் முறையில் உக்ரைன் புதிய நிபுணராக மாறி இருப்பதையும், ஆலோசகராக உருவெடுத்து இருப்பதையும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
மேலும் ஈரானின் அதிநவீன ஷாஹெட் -136 (shahed -136) ட்ரோன்களை எப்படி தடுப்பது மற்றும் அழிப்பது என்பது குறித்து உக்ரைனிடம் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் அணுகி இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எங்களுக்கு உதவி செய்யும் நாடுகளின் பாதுகாப்பிற்கு எங்களின் போர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
அத்துடன் உக்ரைன் உதவி பெறும் நாடு மட்டுமல்ல, நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு உதவும் முக்கிய நாடாகவும் உக்ரைன் தன்னை முன்னிறுத்தி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |