ரஷ்யாவின் கோரிக்கையை நிறைவேற்றுகிறாரா ஜனாதிபதி ஜெலென்ஸ்கி? வெளியான முக்கிய அறிவிப்பு
உக்ரைன் போர் உச்சத்தை தொட்டு இருக்கும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணையும் விருப்பத்தை கைவிட்டுவிட்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா தனது முழுநீள போரை கடந்த மாதம் 24ம் திகதி தொடங்கியது.
தற்போது இந்த போரானது உச்சநிலையை எட்டியிருக்கும் இந்த தருணத்தில், போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருநாட்டு தலைவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைய போவதில்லை என்ற வாக்குறுதிகளையும், ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் பகுதிகளை தனி நாடக அங்கரிப்பது உள்ளிட்ட ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் நிறைவேற்றினால் அந்த நாட்டின் மீதான ராணுவ தாக்குதல் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படும் என ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேட்டோ அமைப்பு ரஷ்யாவுடன் நேரடி போரை தவிர்க்கவே விரும்புவதால் உக்ரைனை சேர்த்துக்கொள்ள நேட்டோ அமைப்பும் தயாராக இல்லை என தெளிவாக தெரிந்துவிட்டது, அதனால் அந்த அமைப்புடன் இணையும் விருப்பத்தை எப்போதோ கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கிரீமியா தீபகற்ப பகுதிகளை ரஷ்ய பகுதியாக உக்ரைன் அங்கீகரிப்பது பற்றியும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்களின் பகுதிகளை தனி நாடுகளாக அறிவிப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால் போரை நிறுத்துவது குறித்து ரஷ்யா முன்வைக்கும் நிபந்தனைகள் அந்த நாடு நினைப்பதை போல் சாதாரணமாவை அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.