விவாகரத்து வழக்கிற்காக 11 மில்லியன் டொலர் செலவு - ஸ்ரீதர் வேம்புவின் முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
Zoho billionaire Sridhar Vembu faces fresh claims from ex-wfe: விவாகரத்து வழக்கிற்காக 11 மில்லியன் டொலர் செலவானதாக ஸ்ரீதர் வேம்புவின் முன்னாள் மனைவி கூறியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் முன்னாள் மனைவி மீண்டும் பரபரப்பு
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான Zoho Corporation-இன் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது முன்னாள் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் (Pramila Srinivasan) இடையேயான விவாகரத்து விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது விவாகரத்து தொடர்பான சட்டப் போராட்டத்திற்காக சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பங்கு மாற்றம் குறித்து புதிய குற்றச்சாட்டு
இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டி மற்றும் எழுத்துப்பூர்வ பதில்களில், பிரமிளா ஸ்ரீனிவாசன், 2011-ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு தனது Zoho நிறுவன பங்குகளை தனது சகோதரி ராதா வேம்பு (Radha Vembu) மற்றும் பிற உறவினர்களுக்கு தனது அனுமதி இல்லாமல் மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த பங்கு மாற்றங்களை தம்பதியரின் கூட்டுச் சொத்துகளை மறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட "கற்பனை பரிவர்த்தனைகள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளை மறுத்த ஸ்ரீதர் வேம்பு
இந்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீதர் வேம்பு மறுத்துள்ளார். தனது மனைவிக்கு சொந்தமான எந்தச் சொத்தையும் மறைக்கவில்லை என்றும், யாரையும் ஏமாற்றும் நோக்கில் எந்தப் பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வாட்ஸ்அப் செய்தியில் தொடங்கிய விவாகரத்து
27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, 2020 அக்டோபரில் வாட்ஸ்அப் செய்தி மூலம் ஸ்ரீதர் வேம்பு விவாகரத்தை கோரியதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து நடைபெறும் என நம்பியதாகவும், பின்னர்தான் அவர் Zoho நிறுவனத்தில் சுமார் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பதாக அறிந்ததாகவும் கூறியுள்ளார்.
மகன் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள்
இந்த தம்பதியரின் 26 வயது மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். மகன் இந்தியாவில் வாழ்வது சிறந்தது என்று ஸ்ரீதர் வேம்பு வாதிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தாங்கள் இருவரும் அமெரிக்காவில் தங்குவதற்கு முன்பே ஒப்புக்கொண்டதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
11 மில்லியன் டொலர் சட்டச் செலவு
விவாகரத்து மற்றும் சொத்துப் பகிர்வு தொடர்பான வழக்குகளுக்காக இதுவரை சுமார் 11 மில்லியன் டொலர் செலவாகியுள்ளதாக பிரமிளா ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். அதில் 5.75 மில்லியன் டொலரை ஸ்ரீதர் வேம்பு வழங்கியதாகவும், மேலும் 2.5 மில்லியன் டொலரை Charm Health நிறுவனத்திடமிருந்து கடனாகப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவும் மேல்முறையீடும்
கலிபோர்னியாவின் அலமேடா கவுண்டி நீதிமன்றம், இந்த வழக்கில் ஸ்ரீதர் வேம்பு 1.7 பில்லியன் டொலர் பத்திர உறுதிமொழி (bond) வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், அந்த உத்தரவை அவர் நிறைவேற்றவில்லை. இந்த உத்தரவு செல்லுபடியாகாது என்றும், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Zoho-வின் உலகளாவிய வளர்ச்சி
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட Zoho நிறுவனம் உலகம் முழுவதும் வணிக மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. வெளிப்புற முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சியடைந்த இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு 2025-ஆம் ஆண்டு விலகி, தற்போது தலைமை அறிவியல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.