நோயை குணப்படுத்துவதாக கூறி புலியின் சிறுநீரை ரூ.600க்கு விற்பனை செய்யும் உயிரியல் பூங்கா
சில நோய்களை குணப்படுத்துவதாக கூறி சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு போத்தல் புலியின் சிறுநீர் ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புலியின் சிறுநீர் விற்பனை
பொதுவாக நோய்வாய்ப்பட்டால் மருந்தை எடுத்துக்கொள்வோம் அல்லது மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவோம். ஆனால் சீனாவில் புலி சிறுநீர், நோய்களுக்கான சிகிச்சையாக விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஒரு போத்தல் புலியின் சிறுநீர் ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வனவிலங்கு மிருகக்காட்சிசாலையில், சைபீரிய புலி சிறுநீர் போத்தல்கள் விற்பனை செய்து வருகிறது.
இது மூட்டுவலி, தசை வலி மற்றும் சுளுக்கு சிகிச்சைக்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. Ya'an Bifengxia வனவிலங்கு உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் 250 கிராம் பாட்டிலை 50 யுவானுக்கு வாங்குகின்றனர்.
இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதற்கு இஞ்சித் துண்டுகளைப் பயன்படுத்துமாறு மிருகக்காட்சிசாலை பரிந்துரைக்கிறது.
இது வாய்வழியாக உட்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஏதேனும் ஒவ்வாமை உள்ளவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மிருகக்காட்சிசாலை கூறுகிறது.
புலியின் சிறுநீர் வாத நோய் அல்லது பிற நோய்களைக் குணப்படுத்தும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மருந்துக்காக சிறுநீர் போன்ற விலங்கு பொருட்களைப் பயன்படுத்துவது பொதுவாக பாரம்பரிய நம்பிக்கைகள் அல்லது கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியுள்ளனர்.
மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், புலி கழிவறைக்குச் சென்ற பிறகு, புலி சிறுநீர் சேகரிக்கப்படுவதாக கூறினார். இருப்பினும், சிறுநீர் விற்கப்படுவதற்கு முன்பு சுத்தம் செய்யப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை.
நாளொன்றுக்கு இரண்டு போத்தல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், விற்பனை மிகவும் குறைவாக உள்ளதாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
2014 ஆம் ஆண்டில், மிருகக்காட்சிசாலையில் ஒரு ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியின் பிரபல போட்டியாளர்களுக்கு புலியின் சிறுநீர் பரிசாக வழங்கப்பட்டது.
தற்போது, புலியின் சிறுநீரை மருந்தாக விற்பனை செய்வது சீனாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையைச் சேர்ந்த மருந்தாளர் ஒருவர், "புலி சிறுநீரில் உடல்நலப் பலன்கள் உள்ளன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இது போன்ற நிரூபிக்கப்படாத சிகிச்சைகளைப் பயன்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தின் நற்பெயர் மற்றும் புலிகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் ஆகிய இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும்" என்றார்.
புலிகளின் எலும்புகளை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை சீன அரசாங்கம் தடை செய்துள்ளது. அதன்படி, மிருகக்காட்சி சாலையில் இதுபோன்ற பொருட்களை விற்க தகுதி உள்ளதா என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |