அயர்லாந்தில் கோதிக் கோட்டை ஒன்றை வாங்கிய மார்க் ஜுக்கர்பெர்க்
Mark Zuckerberg buys Gothic castle: மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்.
தொழில்நுட்பத் துறை கோடீஸ்வரரான மார்க் ஜுக்கர்பெர்க்கும் அவரது மனைவி பிரிசில்லா சானும் அயர்லாந்தில் ஒரு கோட்டையை வாங்கியுள்ளனர்; அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லம் குறித்து அவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோதிக் பாணி மாளிகை
மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க், அண்மைய வாரங்களில் ஆலன்-பக்லி குடும்பத்திடமிருந்து கோதிக் பாணியிலான மூன்று மாடி 'ஸ்ட்ரான்க்கல்லி' (Strancally) கோட்டையை வாங்கியுள்ளார்.

மார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைத் தொடர்ந்து பராமரிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்; அத்துடன் அயர்லாந்தில் நேரத்தைச் செலவிடவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
1827-ல் ஒரு ஆங்கில அரசியல்வாதிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, டப்ளினிலிருந்து சுமார் 93 மைல் தென்மேற்கே, வாட்டர்ஃபோர்டு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு மூன்று மாடி, செதுக்கப்பட்ட கற்களால் ஆன கோதிக் மறுமலர்ச்சி பாணி மாளிகையாகும்.
கோட்டையை வாங்க மார்க் சக்கர்பெர்க் செலுத்திய தொகை தொடர்பான தகவல் வெளியாகவில்லை. இந்தக் கோட்டையானது, கடந்த 20 வருடங்களில் அதன் முந்தைய உரிமையாளர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்பட வேண்டும்
மெட்டா நிறுவனம் அயர்லாந்தில் சுமார் 1,500 பேரைப் பணியமர்த்தியுள்ளது, அதன் சர்வதேசத் தலைமையகம் டப்ளினில் அமைந்துள்ளது. ஜுக்கர்பெர்க்கும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசிப்பார்கள்; அயர்லாந்தில் மெட்டா நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்ளும்போது மட்டும் அங்குள்ள குடியிருப்பைப் பயன்படுத்துவார்கள்.

இதனிடையே, இளம் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை வேண்டுமென்றே அடிமையாக்கும் வகையில் உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்திற்கு எதிராக செவ்வாயன்று நடைபெற்ற அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில், அந்நிறுவனம் குழந்தைகளைத் தெரிந்தே அடிமையாக்கிச் சுரண்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு அடிமைப்படுத்தும் தன்மையுள்ள தயாரிப்புகளை வடிவமைத்ததற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சுமார் 200 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்று கோருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |