ஞானஸ்தான சடங்கால் உயிரிழந்த ஒன்றரை மாத குழந்தை! நெஞ்சை உறையவைக்கும் பரிதாப சம்பவம்
ருமேனியா நாட்டில் ஞானஸ்தான சடங்கின்போது ஒன்றரை மாதக் குழந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் Suceava நகரத்தில் உள்ள ஒரு பழங்கால கிருஸ்துவ தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை, பிறந்து 6 வாரங்களே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு ஞானஸ்தான சடங்கு நடைபெற்றது.
இந்த சடங்கில் பிறந்த குழந்தையை 3 முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்கவேண்டும்.
சடங்கின் பொது முதல்முறை முழுக வைத்ததுமே அந்த குழந்தை மூச்சு திணறி அழ ஆரம்பித்தது. இருப்பினும் தொடர்ந்து சடங்கு செய்து முடிக்கப்பட்டது.
அப்போது குழந்தையின் மூக்கில் தண்ணீர் போனதை பார்த்த தந்தை, உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் குழந்தை மாரடைப்பால் இறந்துவிட்டது.
குழந்தையில் பிரேத பரிசோதனையில் குழந்தையின் நுரையீரலுக்குள் 110 மில்லி லிட்டர் தண்ணீர் இருந்ததாகவும், அதன் காரணமாக இதயம் செயலிழந்து குழந்தை இறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பொதுவாக இந்த சடங்கின்போது, பாதிரியார் குழந்தையின் மூக்கை பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இருந்துள்ளார்.
இதனால் குழந்தையின் பெற்றோர் பாதிரியார் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் சடங்கை நிகழ்த்திய பாதிரியார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ருமேனியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே, ஞானஸ்தான சடங்கில் உள்ள குறிப்பிட்ட நடைமுறையை நிறுத்தக் கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இப்போது நடந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று, சுமார் 60,000 மக்கள் இந்த சடங்கின் நடைமுறைகளுக்கு எதிராக ஒரு ஒன்லைன் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில் உண்மையாகவே ஞானஸ்தானத்தை கொண்டாடவேண்டுமென்றால், அதிலிருக்கும் இந்த ஆபத்தான நடைமுறைகளை நீக்கவேண்டும் என குறிப்பிடபோப்பட்டுள்ளது.