தாலிபான்களின் கண்ணில் மண்ணை தூவி.. அமெரிக்க பெண் செய்த துணிச்சலான காரியம்! குவியும் பாராட்டுகள்
அமெரிக்க பெண் ஒருவர் தாலிபான்களிடம் இருந்து 10 பெண்களை போராடி மீட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களையும் தாலிபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள பெண்களின் நிலை பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள 10 ஆப்கன் இளம் பெண்களை காப்பாற்றியிருக்கிறார் 60 வயதான அல்லிசன் ரெனோ என்ற அமெரிக்கப் பெண்மணி.
ஆப்கன் பெண்கள் ரோபாட்டிக்ஸ் குழுவின் 10 உறுப்பினர்களை மீட்ட அமெரிக்க பெண்ணை தற்போது உலகமே சூப்பர் ஹீரோவாக கொண்டாடிவருகின்றது.ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இருந்து தாலிபான்களின் கொடூர ஆட்டத்தால் அந்நாட்டு ராணுவத்தின் பின்னடவை பார்த்த ரெனோ சிறுமிகள் ஆபத்தில் உள்ளதை புரிந்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
ரெனோவின் தோழியின் உதவியுடன் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்த பிறகு ஆப்கன் பெண்களை பத்திரமாக காபூலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்கினார். பிறகு கத்தார் அரசு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய விமானம் மூலம் 10 பெண்களும் வெற்றிகரமாக அமெரிக்காவிற்கு கொண்டுவந்துள்ளார்.
இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரெனோ இரண்டாவது குழு பெண்களை இன்னும் மீட்கவில்லை என்று மன வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். மேலும் அவர், நான் யாருகிட்டயும் உதவி கேட்டு நிற்கமாட்டேன்.
ஆனால் இந்த முறை உங்களால் முடிந்த வரை ஆப்கானில் சிக்கிய பெண்களுக்கு பிராத்தனை செய்யுங்கள் என்று உருக்கமாக கூறியிருந்தார்.