அமெரிக்காவில் பிராண்டட் மருந்துகளுக்கு 100% வரி: புதிய வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மருந்துகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் மீதான புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
மருந்துகள் மீது 100% வரி
அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு கொள்கையின் கீழ், இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் அல்லது காப்புரிமை கொண்ட மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை உருவாக்கும் வரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால், பிரித்தானியா, அயர்லாந்து, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளனர்.
டிரம்பின் இந்த புதிய அறிவிப்பு அக்டோபர் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரக லொரிகள் மற்றும் குளியலறை அலமாரிகள் மீதும் வரி
மருந்துகளை தொடர்ந்து, கனரக லொரிகள் மீது 25% வரியும், சமையலறை மற்றும் குளியலறை அலமாரிகளுக்கு 50% சுங்கவரியும் விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறை குறித்து டிரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதுகாப்பதே இந்த வரிவிதிப்புகளின் முக்கிய நோக்கம் என்றும், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் பொருட்கள் குவிக்கப்படுவதை தடுக்க இந்த வரி விதிப்பு நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |