குவிக்கப்பட்ட 100,000 ரஷ்ய துருப்புகள்... போர் வெடிக்கும் அபாயம்: உயர் எச்சரிக்கையில் இங்கிலாந்து தளபதிகள்
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி உச்சம் பெற்றிருக்கும் நிலையில், 100,000 துருப்புகளை எல்லையில் ரஷ்யா குவித்துள்ளதை அடுத்து, எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது போர் தொடுக்கும் அபாயம் இருப்பதால், இங்கிலாந்தின் மூத்த தளபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலர் உயர் எச்சரிக்கையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
முன்னர் சந்தேகிக்கப்பட்டதை விட உக்ரைன் மீது ஒரு பெரிய நிலம் மற்றும் கடல் வழியான தாக்குதலுக்கு ரஷ்ய துருப்புகள் மிகவும் தயாராக உள்ளதாக உக்ரைன் மூத்த ராணுவ அதிகாரிகள் தரப்பு கணித்துள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் கிழக்கு உக்ரைனுக்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் நடுவே உக்கிரமான தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் அது மே மாத நடுப்பகுதியில் வரக்கூடும் என அண்மையில் வரை உக்ரைனின் மூத்த தளபதிகள் கணக்கிட்டனர்.
ஆனால், அடுத்த சில தினங்களில் உக்ரைன் எல்லையில் போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படும் என ரஷ்ய தரப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே ரஷ்ய- உக்ரைன் நெருக்கடியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மூத்த தளபதிகள் உயர் எச்சரிக்கை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் எல்லையை நோக்கிய ரஷ்ய துருப்புக்களின் அதிரடி நகர்வுகள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய ரஷ்ய போர்க்கப்பல்கள் இப்போது கருங்கடலில் இருந்து காஸ்பியன் கடலை நோக்கி செல்கின்றன.
இதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்துள்ளதுடன், கருங்கடல் பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய 5 நாடுகள் களமிறங்க கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இந்த மோதல் போக்கை, இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கடுமையாக கண்டித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
அதில், உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் உறுதியான ஆதரவில் 5 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையைக் கண்காணிக்க உக்ரேனுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம், மேலும் ராணுவ நடவடிக்கையில் இருந்து ரஷ்யா பின்வாங்க தொடர்ந்து அழைப்பு விடுப்போம் எனவும் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.


