பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: இதுவரை 11 சிறுவர்கள் கைது
பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 சிறுவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து
சனிக்கிழமை பிரித்தானியாவின் ஈஸ்ட்ஃபீல்ட் அவென்யூ-வில் இரவு 11 மணியளவில் கத்திக்குத்து(Bath stabbing) சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவான் மற்றும் சோமர்செட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு கத்தியால் குத்தப்பட்ட 16 வயது சிறுவனுக்கு மருத்துவ குழு முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BBC
இதையடுத்து பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைமை இன்ஸ்பெக்டர் ரொனால்ட் லுங்கு பேசிய போது, இந்த சம்பவம் நேற்று இரவு எப்படி எதற்காக நடந்தது என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு உரிய பதிலை வழங்குவதே விசாரணை அதிகாரிகளின் தற்போதைய முதன்மை குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.
11 சிறுவர்கள் கைது
இந்நிலையில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே 15 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 15 வயது சிறுவன் ஒருவன் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
BBC
அத்துடன் இந்த கொலை சம்பவத்தில் 35 வயது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் கொலை சம்பவம் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது மொபைல், கார் டாஷ்கேம் , சிசிடிவி காட்சிகள் வைத்து இருப்பவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.