பேருந்து மீது ரயில் மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் பேருந்து மீது ரயில் மோதி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து மீது மோதிய ரயில்
வங்கதேசத்தில் அஞ்சல் ரயில் ஒன்று, துறைமுக நகரமான சிட்டகாங்கிலிருந்து டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 3 மணியளவில், கொமில்லா நகரில் உள்ள படுவார் பஜார் ரயில்வே கிராசிங் பகுதியில், நவாப்கஞ்ச் மாவட்டத்திலிருந்து சிட்டகாங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து ரயில் எஞ்சினுடன் சிக்கி கொண்டதில், ரயில் பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.
விபத்து குறித்து தகவலறிந்த உடன் இராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட மீட்புக் குழுக்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
12 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில், 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

படுவார் பஜார் ரயில்வே கிராசிங்கில் சிக்னல் இல்லாததால், பேருந்து ரயில் தண்டவாளத்தில் ஏறியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என நம்புவதாக தீயணைப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்புத் துறையின் துணை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 2 விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2 வாயிற்காப்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து மற்றும் ரயிலை அகற்றி, அவசரகாலக் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததால், கிட்டத்தட்ட 3 மணி நேரம் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் டாக்கா நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |