பிரித்தானியாவை வாட்டும் வெப்ப அலைகள்: 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் மூழ்கிய சிறுவன்
பிரித்தானியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் ரிப்ஸ்டர்(Ribchester) பகுதியில் ஓடும் ரிபிள்(Ribble) ஆற்றில் நீந்துவதற்காக சென்ற ஜூனியர் ஸ்லேட்டர்(Junior Slater) என்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் தன்னுடைய நண்பர்களுடன் சிறுவன் ஜூனியர் ஸ்லேட்டர் ஆற்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஜூனியர் ஸ்லேட்டர் நீரில் மூழ்கி தத்தளிப்பதாக லங்காஷயர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
இறுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 7.50 மணியளவில் ஆற்றிலிருந்து சிறுவன் ஸ்லேட்டர் உடல் மீட்கப்பட்டது.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள் காரணமாக, நாட்டில் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் இது போன்ற துரதிர்ஷ்டமான சம்பவங்கள் அரங்கேறி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர் இரங்கல்
செல்ல மகனை இழந்த ஜூனியர் ஸ்லேட்டரின் பெற்றோர், தங்கள் அன்பான நீல நிறக் கண்கள் கொண்ட சிறுவன், தற்போது எங்களுடன் இல்லாதது பெரும் துயரம் என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |