கிணற்றில் பிணமாக மிதந்த 17 வயது பள்ளி மாணவர்! தற்கொலையா என விசாரணை
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூரின் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை தெருவில், பள்ளி மாணவர் ஒருவரது சடலம் மிதப்பதை சிலர் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், தீயணைப்பு துறையின் உதவியுடன் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் மாணவரின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குறித்த மாணவரின் பெரிய சூரியப்பிரகாஷ்(17) என்பதும், அவர் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மேலும், அரக்கோணம் அருகே உள்ள தணிக்கை போளூர் கிராமத்தை சேர்ந்த முருகவேல் என்பவரின் மகனான சூரியபிரகாஷ், நேற்றைய தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
மதியம் பள்ளி முடிந்ததும், சக மாணவர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் மாணவர் சூரியப்பிரகாஷ் நீச்சல் தெரியாமல் கிணற்றில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.