பாலியல் அத்துமீறலுக்கு பயந்து 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை: சூடான் உள்நாட்டுப் போர் தீவிரம்!
சூடான் நாட்டில் நடைபெற்று உள்நாட்டு போரில் பயங்கரவாதிகளின் பாலியல் அத்துமீறல்களுக்கு பயந்து 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சூடான் உள்நாட்டுப் போர்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் SAF என்று அழைக்கப்படும் ஆயுத படைகளுக்கும், RSF என்ற துணை ராணுவ குழுக்கும் இடையே உள்நாட்டு போர் மோதல் நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத கொலைகள், இடப்பெயர்வு மற்றும் கட்டமைப்புகளை அழித்தல் ஆகிய பல கொடூரங்களை குடிமக்களுக்கு எதிராக இரு தரப்பும் செய்து வருகிறது.
SAF படைகளுக்கு அப்தெல் பத்தா அல் - புர்ஹான் என்பவர் தலைமை தாங்கி வரும் நிலையில், இரு படையினருக்கும் இடையே 2023ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டு போரில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 75 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறியுள்ளனர்.
பெண்கள் தற்கொலை
இந்நிலையில் இந்த உள்நாட்டு போர் நடவடிக்கையில் மனித உரிமை மீறப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர் ஹலா அல்கரிப் தெரிவித்துள்ளார்.
அவற்றில் குறிப்பாக உடல் ரீதியான சித்தரவதைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் அத்துமீறல் பெருமளவு நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு படைகளிடம் இருந்தும் எதிர்கொள்ள நேரிடும் பாலியல் அத்துமீறல்களுக்கு பயந்து இதுவரை 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 20 ஆண்டுகளாகவே சூடானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பதாக அதிலும் குறிப்பாக உள்நாட்டு போர் தொடங்கிய பிறகு பல மடங்கு அதிகரித்து இருப்பதாக ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |