பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
20 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய சதி செய்த 14 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2000-ஆம் ஆண்டு ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் ஷேக் ஹசீனா உரையாற்றுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அவர் பேசவிருந்த மேடையின் கீழ் 2 பயங்கர வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. அவை வெடிப்பதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
இதற்கு திட்டம் தீட்டி பிரதமரை கொல்ல முயன்ற 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் Harkat ul Jihad al Islami (HuJI) எனும் பங்களாதேஷின் உள்நாட்டு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த வழக்கில் தலைநகர் தாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
இது ஒரு முன்மாதிரியான தீர்ப்பாக அமைய, சட்டம் அனுமதித்தால், "தேச துரோகிகள்" அனைவரையும் துப்பாக்கி ஏந்திய படையினரால் சுட்டுக் கொள்ளலாம், அல்லது நடைமுறையில் உள்ள முறைப்படி வரிசையாக தூக்கிலிடப்படலாம் என நீதிபதி Abu Zafar Mohammed Kamruzzaman தீர்ப்பளித்தார்.
இந்த பதினான்கு குற்றவாளிகளில் 5 பேர் சிறையிலிருந்து தப்பிவிட்ட நிலையில், அவர்களுக்கான தண்டனையை அவர்கள் கைது செய்யப்பட்டப்பின் அல்லது சரணடைந்தப்பின் நிறைவேற்றலாம் என நீதிபதி கூறியுள்ளார்.
