கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! கலவரத்தில் கைதான 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாப நிலை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பில் ஏற்பட்ட கலவரத்தில் கைதான 16 வயதான சிறுவன் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பரிதாப சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 300-க்கும் மேற்பட்ட வன்முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடலூர் மற்றும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அய்யாதுரை என்ற கூலி தொழிலாளி கடந்த 17ம் திகதி முதல் தனது மகனை காணவில்லை என தேடிவந்த நிலையில், அந்த 16 வயது இளம் சிறார் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் காவல் நிலையம் சென்று தனது மகன் 16 வயது சிறுவன் எனவும் சின்னசேலத்திற்கு மருந்து வாங்க சென்று விட்டு வரும் வழியில் அவனை கைது செய்துள்ளீர்கள் எனவும் மன்றாடியுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக தங்களது மகன் இளம் சிறார் எனவும் காவல் துறையினர் அவனின் வயதை மறைத்து வன்முறை குற்றவாளிகளுடன் மத்திய சிறையில் அடைத்து விட்டதாகவும் சிறுவனின் மாற்றுச் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்து உரிய நியாயம் கிடைக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது அலி உத்தரவின் பேரில் காவல் துறையினர் நேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை அழைத்து வந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி முகமது அலி நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த 16 வயது இளம் சிறாரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார்.