மனைவியை கிண்டல் செய்த 17 வயது சிறுவன்..தட்டிக் கேட்ட கணவனை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்
தமிழக மாவட்டம் கடலூரில் மனைவியை கிண்டல் செய்ததைத் தட்டிக்கேட்ட கணவனை, 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டல் செய்த 17 வயது சிறுவன்
கடலூர் மாவட்டம் மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு சித்ரா(30) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
நேற்றைய தினம் சித்ரா வீட்டருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் அவரை கிண்டல் செய்துள்ளான். குறித்த சிறுவன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சித்ரா தன் கணவர் விஜயகுமாரிடம் இதனை கூறியுள்ளார். உடனே சிறுவனிடம் சென்ற விஜயகுமார் ஏன் என் மனைவியை கிண்டல் செய்தாய் என்று கேட்டதுடன், கோபத்தில் கத்தியால் கழுத்தில் கீறியதாக கூறப்படுகிறது.
தட்டிக்கேட்ட கணவன் கொலை
இதனால் ஆத்திரமடைந்த சிறுவனும் தன் வீட்டில் இருந்து கத்தி ஒன்றை எடுத்து வந்து, விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளான். இதில் விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் விஜயகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குறித்த சிறுவனை கைது செய்த பொலிஸார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.