தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு
தேநீர் கடை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் தேர்தல்
மியான்மரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி 83% வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தது.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டிய ராணுவம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சாங் சூகி உள்ளிட்ட தலைவர்களை ராணுவம் சிறையில் அடைத்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வலியுறுத்தி வரும் நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு 3 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் டிசம்பர் 28 ஆம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தேநீர் கடை மீது குண்டுவீச்சு
இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி, சகாய்ங்கின் தபாயின் நகரத்தில் உள்ள மாயகன் கிராமத்தில் தேநீர் கடை ஒன்றின் மீது இரவு 8 மணியளவில் ஜெட் போர் விமானம் ஒன்று 2 குண்டுகளை வீசியுள்ளது.

இந்த தாக்குதலின் போது அங்கே கூடியிருந்த மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு இடையேயான கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த தாக்குதலில், 5 வயது குழந்தை மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அருகே இருந்த 20 வீடுகளும் சேதமடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |