ஈரானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: சிறுமி உட்பட பலர் உயிரிழப்பு: இஸ்ரேல் மறுப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பிராந்திய பதற்றத்துக்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் குண்டுவெடிப்பு
ஈரானின் துறைமுக நகரான பண்டர் அபாஸில் மற்றும் அஹ்வாஸ் நகரில் ஏற்பட்ட அடுத்தடுத்த குண்டு வெடிப்பில் சிறுமி உட்பட பலர் உயிரிழந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் குண்டு வெடிப்பானது பண்டர் அபாஸில் உள்ள 8 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் 4 வயது சிறுமி உயிரிழந்து இருப்பதுடன் 14 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் கட்டிடத்தின் 3 தளங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதுடன், கட்டிடத்திற்கு அருகில் நின்ற வாகனங்கள் மற்றும் கடைகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

அஹ்வாஸ் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பதற்றமான சம்பவத்தை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் வெடிப்புக்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராணுவ தளபதிக்கு இலக்கு?
இதற்கிடையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் கடற்படை தளபதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில் சமூக வலைதள செய்திகள் பொய்யானவை என்று ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் திட்டவட்ட மறுப்பு
அதே நேரத்தில் ஈரானில் நடந்த இந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்புக்கும். தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |