இரவுநேர கேளிக்கை விடுதியில் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: பெருமை திருவிழா ரத்து!
நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 14 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒஸ்லோ நகர மையத்தின் லண்டன் பப் பகுதிக்கு அருகில் உள்ள பிரபல ஓரின சேர்க்கையாளர் பார் மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதியின் அருகில் பல இடங்களில் நேற்று இரவு பொதுமக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர்.
நார்வேவின் பொது ஊடகம் NRK அறிக்கைப்படி, துப்பாக்கி சூடானது மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்ட நிலையில், 14 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கி சூடு தாக்குதலில் சந்தேகிக்கப்படும் நபர், சில நிமிட இடைவேளியிலேயே சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுத் தொடர்பாக ஒஸ்லோ காவல்துறையின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ள அறிக்கையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியில் இருந்த NRK செய்தியாளர் ஒலாவ் ரோனெபெர்க் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள தகவலில், ”முதலில் நபர் ஒருவர் தோள்பையுடன் வருவதை கண்டேன், பிறகு அதிலிருந்து அவர் துப்பாக்கி ஒன்றை வெளியெடுத்து பொதுமக்களை சூட ஆரம்பித்தார், ஆரம்பத்தில் அதனை ரப்பர் துப்பாக்கி என்றே கருதினேன் ஆனால் அது பாரின் கண்ணாடிகளை துளைத்துக் கொண்டு செல்லும் போது தான் நிலைமையின் தீவிரத்தை உண்ர்ந்தேன்” எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: கருக்கலைப்பு தீர்ப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள்: அமெரிக்க உச்சநீதிமன்றம் முற்றுகை!
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த ஓரின சேர்க்கையாளருக்கான பெருமை திருவிழா பொலிஸாரின் அறிவுறுத்தலின் படி விளக்கிக் கொள்ளபடுவதாக விழா குழு தெரிவித்துள்ளது.