கோரத்தாண்டவம் ஆடிய வெள்ளம்! 2 லட்சம் வீடுகள் அழிந்ததாக ஐ.நா அறிக்கை
பாகிஸ்தானில் வெள்ளத்திற்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிந்ததாக அறிவிப்பு
பாதிப்புகளுக்கு உள்ளாகும் மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்ப்பு
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளதாக ஐ.நாவின் நிவாரண நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சூன் 14ஆம் திகதி முதல் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 2 லட்சத்து 18 ஆயிரம் வீடுகள் அழிந்துள்ளன.
மேலும் 4 லட்சத்து 52 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்ததால் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக 5,492 பள்ளிகள் பயன்படுத்தப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
பல மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 937 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நிலைமை கடந்த இரண்டு வாரங்களாக மேலும் மோசமடைந்துள்ளது.
அங்கு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் இடப்பெயர்வு மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பேரிடர் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: PDMA, KP